நாளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்

குடிபோதையில் காளைகளுடன் வந்தால் அனுமதி மறுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் கூறியுள்ளார்.
மதுரை,
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதனையொட்டி, திருப்பரங்குன்றம் சாலையில் பத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறும், இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் மாநகர காவல்துறை சார்பாக இன்று இரவு 10 மணிமுதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
* எஸ்.பி. நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
* ஜல்லிக்கட்டு களத்தில் கவசம் அணிந்து காவல்துறையினர் பணியில் ஈடுபடுவர்
* காளைகள் இடையே மோதல்களை தவிர்க்கும் வகையில் முதல் கட்டமாக, முதல் 500 டோக்கன் உள்ள காளைகள் உள்ளே அனுமதிக்கப்படும்.
* டோக்கன் எண் பிரகாரம் நூறு நூறாக பிரித்து அனுப்பப்படும்
* ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், காளைகள் பரிசோதனை செய்யுமிடம், காளை வெளியேறும் இடம் என அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்
* குடிபோதையில் காளைகளுடன் வந்தால் அனுமதி மறுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






