ஜம்மு காஷ்மீர் வெள்ளம், நிலச்சரிவு: 3-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்

மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் என கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்ல அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மலைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் சிக்கி கொண்டனர். மலைப்பாதையில் இருந்த வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வாரி சுருட்டிசென்ற வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 60 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 170 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், 75 பேர் காணாமல் போனதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், அவர்களில் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரிய பாறைகள், மரக்கட்டைகள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் மற்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
மீட்பு நடவடிக்கையில், 3-வது நாளாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தால் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. மோப்பநாய் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






