தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நிறைவு: குறைந்த அளவு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை,

மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த 19-ந் தேதி இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 22-ந் தேதி (அதாவது நேற்று) மக்கள் ஊரடங்கு கடை பிடிக்குமாறும், அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கை கடைப்பிடித்தார்கள்.

இந்த ஊரடங்கை 23-ந் தேதி(இன்று) காலை வரை திடீரென நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களின் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு 23-ந்தேதி காலை 5 மணி வரை தொடரும் கூறப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

அதிகாலை 5 மணிக்குப் பிறகு, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. எனினும், வழக்கம் போல் இல்லாமல் தேவைக்கேற்ப குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் டீக்கடைகள், சிறியக் கடைகள் திறந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com