ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்: சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், தமிழ்நாடு அரசின் சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்: சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து  மரியாதை
ஜவஹர்லால் நேரு, அமைச்சர்கள்
Published on: 

சென்னை,

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர்கள், அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மாலை அணிவித்து மரியதை

தமிழ்நாடு அரசின் சார்பில், ஜவஹர்லால் நேருவின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.ரா ஆகியோர் இன்று (14.11.2026) சென்னை, கிண்டி, கத்திபாரா சந்திப்பில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

சுயசரிதை

ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் நாள் பிறந்தார். அந்நிய நாட்டின் அடிமைத்தனத்தை எதிர்க்கின்ற வகையில், ஆங்கிலேய அரசுக்கு எதிராக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட பல்வேறு தொடர் போராட்டங்களில் பங்கேற்று, ஏறத்தாழ 9 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். சிறையில் இருந்த நாட்களில் அவர் எழுதிய நூல்களில் "உலக வரலாற்றின் துளிகள்", "இந்தியாவின் தரிசனம்” மற்றும் "விடுதலையை நோக்கி" ஆகிய நூல்களும், சுதந்திர தாகம் குறித்து தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய 137 கடிதங்களின் தொகுப்பான ‘சுயசரிதை' இன்றளவும் உலகளவில் பேசப்படும் சிறந்த நூல்களாகும்.

முதல் பிரதமர்

ஜவஹர்லால் நேரு இந்திய திருநாட்டின் முதல் பிரதமராக ஏறத்தாழ 16 ஆண்டு கால தொடர் ஆட்சியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட ஐந்தாண்டு திட்டங்கள், கலப்பு பொருளாதார கொள்கை, பஞ்சசீல கொள்கை, அணிசேரா கொள்கை போன்ற முக்கிய வெளியுறவு கொள்கைகளை வகுத்தார். அறிவியல், அணுசக்தி, விண்வெளி மற்றும் வேளாண் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை அமைத்தார்.

நம்பிக்கை

நவீன இந்தியாவின் சிற்பி" என்று நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு, காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அன்னாருடைய தியாகத்தையும், திறமையான நிருவாகத்தையும் பறைச்சாற்றுகின்ற வகையில், இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், சாலைகள் உள்ளிட்ட பலவற்றிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டார்.

அரசு விழா

ஜவஹர்லால் நேரு, தன் வாழ்நாளின் இறுதி காலம் வரையில் குழந்தைகள், இளைஞர் நலன், அவர்களின் கல்வி வளர்ச்சி ஆகியவற்றிலேயே அதிகம் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, குழந்தைகளின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாக அன்னாரது பிறந்த நாளான நவம்பர் 14-ம் நாள் குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும், ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், தமிழ்நாடு அரசின் சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரீஷ், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X