“எனது தந்தையின் உடல் நிலை குறித்து போலீசாரிடம் தெரிவித்தேன்: அவர்கள் கேட்கவில்லை” - ஜெயக்குமாரின் மகன் பேட்டி

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
“எனது தந்தையின் உடல் நிலை குறித்து போலீசாரிடம் தெரிவித்தேன்: அவர்கள் கேட்கவில்லை” - ஜெயக்குமாரின் மகன் பேட்டி
Published on

சென்னை,

ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த சூழலில் அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, 40 பேர் அடங்கிய போலீசார் இன்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் முன்பு அவரது மகனும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்த்தன், தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், போலீசார் என்னை தள்ளி விட்டு வீட்டுக்குள் நுழைந்தனர். எனது தந்தை ஜெயக்குமாரின் உடல் நிலை குறித்து போலீசாரிடம் தெரிவித்தேன். ஆனால் போலீசார் கேட்கவில்லை. கைது செய்து அழைத்துச் செல்லும் பொது போலீசார் எங்கள் வாகனத்தை பின் தொடர விடாமல் தடுத்தனர். தற்போது வரை அவரை எங்கு வைத்துள்ளார்கள் என்று தெரிவிக்கவில்லை. கைது சம்பவம் முழுவதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்றுள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை. என்று ஜெயவர்த்தன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com