ஜெயலலிதாவை விமர்சித்தேனா? கடம்பூர் ராஜு மறுப்பு


ஜெயலலிதாவை விமர்சித்தேனா? கடம்பூர் ராஜு மறுப்பு
x
தினத்தந்தி 30 July 2025 2:20 PM IST (Updated: 30 July 2025 2:31 PM IST)
t-max-icont-min-icon

திமுகவுக்கு அதிகாரம் கொடுத்தது பாஜகதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:-

1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம். இனி ஒருநாளும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த முடிவு திமுகவுக்கு சாதகமானது.

அன்றைக்கு பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது என்றார். ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் இது குறித்து கடம்பூர் ராஜு கூறுகையில்,

ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என கூறவில்லை. வரலாற்றுப்பிழை என்ற அர்த்தத்தில் நான் அதை தெரிவிக்கவில்லை. பாஜகவால் திமுக வளர்ந்துவிட்டது என்பதே எனது பேச்சின் அடிப்படை கருத்து. எனது கருத்து திரித்து சொல்லப்படுகிறது என்றார்.

1 More update

Next Story