

மதுரை,
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா சொத்துகள்
தமிழக முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா, ஏராளமான சினிமாவில் நடித்து பல கோடி ரூபாய் சம்பாதித்தார். அவர், கடந்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி இறந்தார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது, அவரது சொத்து விவரங்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார்.
இதுதவிர தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன. அந்த சொத்துகளை தனக்கு பின் யார் நிர்வகிப்பார்கள் என்பது தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அவருக்கு நேரடி வாரிசும் இல்லை.
இன்று விசாரணை
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின்படி அவருடைய சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும். பின்னர் அந்த சொத்துகளை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு நிர்வகித்து, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (வியாழன்) விசாரணைக்கு வருகிறது.