

சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார்.
கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன். அவரைப் பற்றி இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள். ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்.பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி பியூஸ் கோயல்,
முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். பெண் சக்தி மற்றும் மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிகுந்த பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை. என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம், “அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;
மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது. ஜெயலலிதாவின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், “Poverty Alleviation” -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர். We Take a leaf out of your book in all of our actions for the people Amma. மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, அதிமுக என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதா சூளுரைத்தார்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள். அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,
கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று ஜெயலலிதா பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம். "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இரும்பு பெண்ணாக நின்று.. கடுமையான அரசியல் சூழ்நிலைகளை.. துரும்பு என்று சமாளித்து... கடுமையாகத் தெரிந்தாலும்.. மனதில் கரும்பு என்று... நிரூபித்து... கட்சி எல்லை கடந்து.. பெண்கள் விரும்பும் தலைவியாக.. வலம் வந்த... மரியாதைக்குரிய.. முன்னாள் முதல்-அமைச்சர் அம்மா ஜெயலலிதாவை அவர் பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்ந்து துணிச்சல், தீர்மானம், உறுதியான தலைமை இவை அனைத்திற்கும் உருவாக திகழ்ந்த இரும்புப் பெண்மணி கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் மகளிர் பாதுகாப்பிற்கும் எளிய மக்களின் முன்னேற்றத்திற்கும் தன் ஆக்கபூர்வமான திட்டங்களால் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவை இந்த நாளில் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா பிறந்த தினம் இன்று. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சராக விளங்கியவர். பெண்கள் முன்னேற்றம், சமூக நலத்திட்டங்கள், குழந்தைகள் நலனுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள், தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். உறுதியான தலைவராகத் திகழ்ந்த புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா புகழைப் போற்றி வணங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,
தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் ஜெயலலிதாவையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்,
தமிழக மக்களால் 'அம்மா' என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் அம்மையார் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளில் மக்களுக்காக அவர் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து அவருக்கு நம் மரியாதையை செலுத்துவோம். என்று தெரிவித்துள்ளார்.