ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் பதில் மனு தாக்கல்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #TamilNews #Sasikala
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் பதில் மனு தாக்கல்
Published on

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், கடந்த மாதம் 21-ந் தேதி சசிகலாவுக்கு ஒரு சம்மன் அனுப்பியது.

அதில், தங்களுக்கு (சசிகலாவுக்கு) எதிராக பலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்து இருப்பதால் அதற்கு நேரிலோ, வக்கீல் மூலமோ ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்த பின்பு தனக்கு எதிராக புகார் மற்றும் சாட்சியம் அளித்த அனைவரின் விவரங்களையும், ஆவணங்களையும் அளித்து சம்பந்தப்பட்ட நபர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதன்பின்பு தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கும்படியும் சசிகலா தனது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் மூலம் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணையம், சசிகலாவின் கோரிக்கையை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக இதுவரை சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு வசதியாக சாட்சியங்களை பெற்றுக்கொள்ளவும், இனிவரும் காலங்களில் சாட்சியம் அளிப்பவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணை செய்து கொள்ளவும் அனுமதி அளித்தது. மேலும், இந்த உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த 30-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு நகல் மற்றும் சாட்சியங்களின் நகல் ஆகியவற்றை ஆணையம் உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு அனுப்பி வைத்தது. இவற்றை சசிகலா 1-ந் தேதி பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோன்று சசிகலாவின் வக்கீலுக்கும் சாட்சியங்களின் நகல் மற்றும் ஆணையத்தின் உத்தரவு நகல் அளிக்கப்பட்டது.

ஆணையத்தின் இந்த உத்தரவு நகலை சசிகலா 1-ந் தேதி பெற்றுக்கொண்டுள்ளதால் அவர் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணையம் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் சசிகலா சார்பில் அவரது வக்கீல் விசாரணை ஆணையத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் குறுக்கு விசாரணையை தொடங்குவதற்கு 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் சாட்சியங்கள் அளித்த ஆவணங்களையும் தர வேண்டும் என மனுவில் சசிகலா தரப்பு கோரிக்கை வைத்து உள்ளது.

சசிகலாவுக்கு வழங்கிய 22 சாட்சியங்களின் விவரங்களோடு, அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களையும் அளிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

ஆவணங்களை அளித்தால் சசிகலா 10 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வார். ஜெ.சிகிச்சை வீடியோவில் அலட்சியமாக இருந்ததாக குறிப்பிட்டதை நீக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com