

சென்னை
நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லம் ஆக்கப்படும் என்றும் அறிவித்தார்.
போயஸ்கார்டன் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலி யுறுத்தி வருகிறார்கள். எனவே போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்தார். போயஸ்கார்டன் இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. அதை நினைவு இல்லமாக மாற்ற ஒப்புக் கொள்ள முடியாது என்றார். அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில், மக்களின் கோரிக்கைகளை ஏற்றே போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சட்டரீதியாக அந்த இல்லத்துக்கு யார் உரிமையாளர்களோ அவர்களுக்கு இழப்பீடு தந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இந்த நிலையில் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்கும் பணிகள் இன்று தொடங்கின. இதற்காக மயிலாப்பூர் தாசில்தார் சைலேந்தர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சியை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றனர். அங்கு அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 2 நாட்களிலேயே நினைவு இல்லமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான முயற்சிகள் ஒருபுறம் நடக்கும் நிலையில் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தொடங்கி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.