ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஜெ.தீபா, தீபக் எதிர்ப்பு; மீண்டும் விசாரணை நடத்த இருவரின் வக்கீல்கள் வலியுறுத்தல்

கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெ.தீபா, தீபக் ஆகியோரின் சார்பில் அவர்களுடைய வக்கீல்கள் நேற்று ஆஜராகினர். அப்போது வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஜெ.தீபா, தீபக் எதிர்ப்பு; மீண்டும் விசாரணை நடத்த இருவரின் வக்கீல்கள் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். வேதா இல்லத்துக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு கிண்டி நில நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதன்படி, சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு ஜெ.தீபா சார்பில் அவருடைய வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, ஜெ.தீபாவின் கணவர் மாதவன், தீபக் சார்பில் வக்கீல் எஸ்.எல்.சுதர்ஷன் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது அவர்கள் ஜெ.தீபா மற்றும் தீபக்கை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளதால், இழப்பீடு தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்றும் ஜெ.தீபா மற்றும் தீபக் தரப்பு வக்கீல்கள், அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதுகுறித்து வக்கீல் தொண்டன் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக ஜெ.தீபா மற்றும் தீபக்கை ஐகோர்ட்டு அறிவித்துள்ள நிலையில் ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலாக புது நோட்டீசு அனுப்புமாறு கேட்டோம். அந்த இடத்துக்கு இழப்பீடு வேண்டுமா? என்று கேட்டார்கள். நாங்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டோம் என்றார்.

தீபக்கின் வக்கீல் எஸ்.எல்.சுதர்ஷன் கூறும்போது, ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினோம். தற்போது ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விசாரணையை மீண்டும் புதிதாக நடத்தவேண்டும் என்று கூறினோம். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகிய 2 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com