ஜேடர்பாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து அகற்றம் அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

ஜேடர்பாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து அகற்றம் அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு
ஜேடர்பாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து அகற்றம் அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு
Published on

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டன. அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு குடியிருப்புகள்

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளைமேடு மற்றும் காமராஜர் நகர் பகுதி தார்சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

ஆனால் கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தாததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்ற கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஜேடர்பாளையம் 4 ரோடு அருகே கடந்த 9-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் வகையில் நேற்று காலை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரங்களுடன் அதிகாரிகள் வந்தனர். இதையடுத்து அங்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு கருதி நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) மணிமாறன் தலைமையில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வீரம்மாள், ரவிச்சந்திரன், 10-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர், நெடுஞ்சாலை துறை ஆய்வாளர்கள் ஞானசுப்ரமணி, சிவகாமி, வருவாய் துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை கண்ட 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அங்கு திரண்டனர். பின்னர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இதே பகுதியில் சாலையில் இருபுறமும் குடியிருப்புகளை தவிர்த்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மற்ற பகுதிகளையும் வருவாய் துறையினர் அளவீடு செய்து முழுமையாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com