ஜே.இ.இ தேர்வு: 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு...!

ஜே.இ.இ தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜே.இ.இ தேர்வு: 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு...!
Published on

சென்னை,

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது வரும் ஜனவரி 24-ம் தேதியில் இருந்து ஒருவாரம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு நடந்து வரும் நிலையில, வரும் 12-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில ஆன்லைன் பதிவிலான இந்த தேர்வு விண்ணப்ப படிவத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அல்லது தரவரிசை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று மட்டும் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஜே.இ.இ தேர்வுக்கு, மதிப்பெண்கள் அல்லது தரவரிசையையும் பதிவிட முடியாத நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக மாணவர்களின் நலன் காக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.

மேலும், ஜே.இ.இ தேர்வில10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழக மாணவர்களுக்கு ஜே.இ.இ தேர்வு விண்ணப்பத்திற்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com