

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மதுவந்தாங்கல் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் டேனியன் பேட்ரிக் (வயது 30), இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாம்பரம் அருகே உள்ள தர்காஸ் பகுதியில் கோவில் திருவிழாவிற்காக சென்றார். பின்னர் திருவிழா முடிந்து நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு டேனியன் பேட்ரிக் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து டேனியன் பேட்ரிக் ஒரகடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.