

புதுடெல்லி,
டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கபட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு வேலைக்காரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி வடக்கு மாவட்டத்தின் மால் ரோடு பகுதியில் வசிப்பவர் ஒரு பிரபல தொழிலதிபர். இவருடைய குடும்பத்தினர் கடந்த 2-ந்தேதி அன்று வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றனர். வீட்டில் யாரும் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இவர்களது புதிய வீட்டு வேலைக்காரனான கமல் (அனில் காமத்) மற்றும் அவனது கூட்டாளிகள், கடந்த 5-ந்தேதி இரவில் வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து தப்பியோடினர்.
இதையடுத்து கடந்த 6-ந்தேதி அன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த மேலாளர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.வடக்கு டெல்லி டிசிபி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு தீவிர விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் குற்றவாளிகள் டெல்லியிலிருந்து தப்பி ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சென்றது தெரியவந்தது. டெல்லி போலீசார் உடனடியாக ஜார்கண்ட் விரைந்து, அங்கு மறைந்திருந்த 17 வயது சிறுவன் ஒருவனைப் பிடித்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில், பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள சுகா நகர் கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு கமலின் மாமனார் தேவ சந்திர சா (வயது 49) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
வீட்டில் சோதனையிட்ட போது நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், வீட்டின் ஒரு அறையின் தரைப்பகுதி புதிதாக பூசப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. எனவே, அந்த இடத்தை 5 அடி ஆழத்திற்கு தோண்டிய போது, உள்ளே ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த பையில் 117 தங்க மற்றும் வைர நகை பொருட்கள் (நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள்) மற்றும் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், போலீசாரிடம் சிக்காமல் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான கமல், கடந்த 16-ந்தேதி அன்று டெல்லியின் ஆனந்த் விகார் பகுதியில் வைத்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருடப்பட்ட ரூ.3 கோடி நகைகளை சில மாதங்கள் கழித்து விற்றுவிட்டு, அந்த பணத்தைக் கொண்டு நேபாளத்திற்கு தப்பிச் சென்று அங்கு ஒரு ஆடம்பர உணவகம் அல்லது கபே தொடங்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அவரது திட்டத்தை முறியடித்த டெல்லி போலீசார், திருடப்பட்ட அனைத்து நகைகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.