கிராமுக்கு ரூ.10,000 வரை நகை கடன் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை அறிவிப்பு
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ.10,000 வரை நகை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12%-ல் இருந்து 13% ஆக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 7,000/- எனவும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று (05.10.2026) நடைபெற்ற முக்கியக் கூட்டத்தொடரில் நகைக் கடன்கள் தொடர்பாகப் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடன் அளவு உயர்வு

நகைக் கடன்களுக்கு (Jewel Loan) ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 10,000/- வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வட்டி விகிதத்தில் சலுகை & சீரமைப்பு:

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது.

இதனைச் சீரமைக்கும் வகையில், JL-CC PACCS-க்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதம், DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், PACCS-ன் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூட்டறவுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com