ஜெயக்குமார் ஆடியோவுக்கும், தினகரனுக்கும் எந்த சம்பந்தமில்லை; தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

ஜெயக்குமார் ஆடியோவுக்கும், தினகரனுக்கும் எந்த சம்பந்தமில்லை என தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்து உள்ளார்.
ஜெயக்குமார் ஆடியோவுக்கும், தினகரனுக்கும் எந்த சம்பந்தமில்லை; தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
Published on

நெல்லை,

மீடூ விவகாரம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக வலைதளங்களில் நேற்று ஒலிநாடா ஒன்று பரபரப்பாக சுற்றி வந்தது.

ஆனால், இதை அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த விஷயம் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் கற்பிக்கவேண்டும் என்ற வகையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ஒரு நட்சத்திர ஓட்டலில் நான் யாருடனோ இருப்பது போன்று போலியான புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார்கள். பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் பரப்பினார்கள். அது உடனடியாக என் கவனத்துக்கு வந்து, சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதில் தோல்வியடைந்தவர்கள் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நான் முழுமையாக எதிர்க்கின்ற காரணத்தால், என்னை நேரடியாக எதிர்க்கின்ற திராணி இல்லாதவர்கள், ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். வீடியோவிலேயே போலியான ஆள் ஒருவர் இருப்பது போன்று செய்யலாம். ஆடியோவிலும் போலியாக பேசுவது போன்று செய்யலாம். அப்படி ஆடியோவை போலியாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதனை சட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்கொள்வோம். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என கூறினார்.

இந்த நிலையில் குற்றாலத்தில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் 20 பேர் உள்ளோம். இன்னும் 2 பேர் வந்து விடுவார்கள்.

தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழாவில் புனித நீராடி விட்டு குற்றாலத்தில் ஓய்வெடுப்போம். 2 நாள் குற்றாலம் ரிசார்ட்டில் தங்கி விட்டு 3வது நாள் சென்னைக்கு சென்று விடுவோம் என கூறினார்.

அதன்பின் அவர், ஜெயக்குமார் ஆடியோவுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் எந்த சம்பந்தமில்லை. அமைச்சர் குற்றமற்றவர் என்றால் உண்மையை கண்டுபிடிக்க முதல்வர் உத்தரவிட வேண்டியதுதானே என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com