100 நிமிடங்களில் புக் ஆன ஜியோ பங்குகள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் 2 சதவீதம் உயர்வு

ஜியோ பொதுப்பங்கு வெளியீடு சந்தா நாளைவரை (வெள்ளிக்கிழமை) பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
100 நிமிடங்களில் புக் ஆன ஜியோ பங்குகள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் 2 சதவீதம் உயர்வு
Published on: 

புதுடெல்லி,

ஜியோ பொதுப்பங்கு வெளியான 100 நிமிடங்களில் முழுவதும் முன்பதிவு பெற்று புதிய சாதனை படைத்தது. இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் 2 சதவீதம் உயர்ந்தன.

பொதுப்பங்கு வெளியீடு

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் பங்குச்சந்தைகளில் பட்டியலாகப்போவதாக அறிவித்தது. முன்னதாக பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ.30 ஆயிரத்து 213 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. திரட்டப்படும் நிதிநிறுவனத்தின் கடன் அடைப்பு மற்றும் பொதுவான கார்ப்பரேட் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய சாதனை

அதன்படி பொதுப்பங்கு வெளியீடு நேற்று தொடங்கியது. பொதுமக்களின் சந்தாவுக்காகத் திறக்கப்பட்ட வெறும் 100 நிமிடங்களிலேயே 100 சதவீத முழு சந்தாவையும் பெற்று குவித்தது. இதன்மூலம் இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேரத்தில் முழுமையாக விற்கப்பட்ட பொது வெளியீடு என்ற புதிய சாதனையை ரிலையன்ஸ் ஜியோ பிளாட் பார்ம்ஸ் படைத்துள்ளது.

பங்குகளின் தேவை அதிகரிப்பு

2024-ம் ஆண்டின் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சாதனையை முறியடித்து, அதிகாரப் பூர்வமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்பங்கு முதலீடு என்ற அந்தஸ்தைப் பெறவிருக்கும் இந்த ரூ.30 ஆயிரத்து 213 கோடி பொது வெளியீடு, ஆரம்பத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நிறுவன முதலீட்டாளர்களின் பலத்த ஆதரவால், ஒட்டுமொத்தப் பங்குகளுக்கான ஸ்லாட் முற்பகல் 11.40 மணிக்கே முழுமையாக நிரம்பியது.

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்குகள் முதல் 10 நிமிடங்களிலேயே முழுமையாக சந்தாவைப் பெற்றன. மதிய நிலவரப்படி, ஒட்டுமொத்த ஏலக் குவியலின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இதனால் முதல் நாள் முடிவில் பங்குகளின் தேவை 2.35 மடங்குக்கும் மேல் அதிகரித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முன்னதாக நேற்று முன்தினம் 212 முன்னணி முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுப்பங்கு முதலீடு மூலம் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு தெளிவாகத் தெரிந்ததால், முதலீட்டாளர்கள் அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கினர். தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கின் விலை அதிகபட்சமாக 2.68 சதவீதம் வரை உயர்ந்து ரூ.1,234 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

அதேபோல், மும்பை பங்குச் சந்தையிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 1.83 சதவீதம் உயர்ந்து ரூ.1,224-க்கு வர்த்தகமானது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் இந்த பொதுப்பங்கு வெளியீடு சந்தா நாளைவரை (வெள்ளிக்கிழமை) பொதுமக்களுக்குத் திறந்திருக்கும். வருகிற 28-ந்தேதி அன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com