அமைச்சர் மனைவிக்கு பணியிட மாற்றம்: மாற்று ஆசிரியர் நியமிக்கப்படாததால் கற்றல் பாதிப்பு

மாற்று ஆசிரியர் நியமிக்கப்படாததால், கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பல்லாவரம் அரசு பள்ளியில் இருந்து, அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி, திருவல்லிக்கேணி அரசு பள்ளிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவருக்கு மாற்றாக புதிய ஆசிரியர் நியமிக்கப்படாததால், கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கலந்தாய்வு பணிகள் நிறுத்தம்

அரசு தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, 'எமிஸ்' தளம் வழியாக, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வுகள், ஜூன் மாதம் நடப்பதாக இருந்தன. கோர்ட்டு உத்தரவுகளால், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

விமர்சனம்

இந்த சூழலில், சென்னையை அடுத்த பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணியாற்றிய, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு மட்டும், திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சரின் அரசு இல்லம், சென்னை பசுமை வழிச்சாலையில் இருப்பதால், இந்த பணிமாறுதல் வழங்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

கூடுதல் சுமைகள்

இந்த நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி, ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில், அவருக்கு மாற்றாக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், அப்பள்ளியில் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:-

கற்றல் பாதிப்பு

மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் இந்த பள்ளியில் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமைகள் உள்ளன. இந்த சூழலில், அமைச்சரின் மனைவிக்கு மாற்றாக புதிய ஆசிரியரை, அந்த பணியிடத்தில் இரண்டு மாதங்களாக நியமிக்காமல் உள்ளனர். இதனால், மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com