தமிழக அரசில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஜி.கே.வாசன்

கனிமவளக் கொள்ளையை முழுமையாக தடுத்து நிறுத்தவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஜி.கே.வாசன்
Published on

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கல்குவாரிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது ஆளும் கட்சியினரே கனிமவளக் கொள்ளைக்கு துணை போவதும், அராஜகத்தில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது தமிழக அரசில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

நேற்றைய தினம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதை பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோர் குவாரிக்குச் சென்று செய்தியை சேகரிக்க முற்பட்ட போது குவாரியில் இருந்த கும்பல் ஊடகவியலாளர்களை தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கேமரா மற்றும் சாதனங்களையும் உடைத்துள்ளனர்.

இது பத்திரிகைச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதை செய்தி வாயிலாக அம்பலப்படுத்திய செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததற்கு காரணம் ஆட்சி அதிகாரம் தான்.

எனவே தமிழக அரசு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தரவும், சட்டவிரோத கல்குவாரி கனிமவளக் கொள்ளையை முழுமையாக தடுத்து நிறுத்தவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக அரசு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அத்துணை பேரும் சுதந்திரமாக பாதுகாப்பாக பணி புரிய சட்டம் ஒழுங்கை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com