ஓபிஎஸ், டிடிவி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுமாறு நயினார் நாகேந்திரனிடம் ஜே.பி. நட்டா அறிவுறுத்தல்?

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
இந்த பரபரக்கும் சூழலுக்கு மத்தியில், தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லி சென்றார். அவர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி .நட்டாவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி உள்பட பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. சந்திப்பு பற்றி நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, "தமிழக பா.ஜனதா சார்பில் அடுத்த மாதம் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடங்க இருக்கிறது. இதனை தொடங்கி வைக்க தேசிய தலைவரை அழைத்தேன். அவர் இன்று பதில் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்" என்று கூறினார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைபோல ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி செய்யுமாறு ஜெ.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரித்து கொடுக்கவும், இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை வரும் டிசம்பருக்குள் முடிக்க நயினார் நாகேந்திரனிடம் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






