

சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற மார்ச் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை பார் கவுன்சிலை நிர்வகிக்கும் சிறப்புக்குழு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் வக்கீல்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 12-ந் தேதி உத்தரவு பிறப்பித்தனர்.
வக்கீல்கள் முறையீடு
இதன்பின்னர், நீதிபதி என்.கிருபாகரன் சென்னை ஐகோர்ட்டுக்கு வந்துவிட்டார். சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரித்து வருகிறார். இதற்கிடையில், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுடன் கடைசி நாளாகும்.
இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் முன்பு, வக்கீல்கள் சிலர் ஆஜராகி, வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் முடிவடைந்து விட்டதால், ஐகோர்ட்டு மதுரையில் தள்ளிவைக்கப்பட்ட தீர்ப்பை உடனே வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சீரழிந்து விட்டது
இதற்கு பதில் அளித்த நீதிபதி, தீர்ப்பு தயாராகி வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என்றார். பின்னர், தற்போதுள்ள சூழ்நிலைகளில் வக்கீல்களின் செயல்பாடுகள் குறித்து வேதனை தெரிவித்து சில கருத்துகளையும் நீதிபதி கூறினார். நீதிபதி கூறியது பின்வருமாறு:-
வக்கீல் தொழில் மாண்பையும், மதிப்பையும் வக்கீல்கள் சிலர் கெடுத்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக வக்கீல் தொழில் முழுவதுமாக சீரழிந்துவிட்டது. இந்த புனிதமான தொழிலை பாதுகாக்க மூத்த வக்கீல்களும் தயாராக இல்லை.
வேதனை அளிக்கிறது
8-ம் வகுப்பைக்கூட தாண்டாத ஒருவர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்று, அதனடிப்படையில், சட்டப்படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றுள்ளார். இப்போது வக்கீலாக பதிவு செய்து, வக்கீல் சங்கத்தை புதிதாக தொடங்கி நடத்துகிறார். ஐகோர்ட்டுக்கு எதிரே, மிகப்பெரிய கட்அவுட் அமைத்து, விழா எடுக்கிறார். இந்த விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதுபோன்ற நபர்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் துணையாக இருப்பது வேதனை அளிக்கிறது.
நீதிபதிக்கு பாதுகாப்பு
ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இல்லை என்றால் ஐகோர்ட்டு நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும். இப்போது எனக்கு (நீதிபதிக்கு) வழங்கப்பட்டு வரும் ஒய் பிரிவு பாதுகாப்பு, இசட் பிரிவாக கூட மாறியிருக்கும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.