

சென்னை,
நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேவை வரித்துறை அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர். பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் விஷால் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். அவருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. வழக்கு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க 26-ந் தேதி(நேற்று) கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், இல்லையன்றால் வாரண்டு பிறப்பிக்கப்படும் என்றும் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
விஷால் ஆஜர்
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நடிகர் விஷால் 2-வது முறையாக கோர்ட்டில் ஆஜரானார். அப்போது விஷால் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரது வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு விஷால் தரப்பு வக்கீல், இது பொய்யான குற்றச்சாட்டு. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதி, பொதுவாக ஆசைப்படலாம். குற்றமல்ல. ஆனால், பேராசைபடக்கூடாது என்றார். இதைக்கேட்டு கோர்ட்டில் இருந்தவர்கள் சிரித்தனர். இதன்பின்பு, விசாரணைக்கு ஆஜராகும்படி உங்களுக்கு(விஷாலை பார்த்து) சேவை வரித்துறை அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சூழ்நிலை காரணமாக ஆஜராக முடியவில்லை என்று விஷால் கூறினார்.
விசாரணை தள்ளிவைப்பு
இதைத்தொடர்ந்து, விஷால் மீதான குற்றச்சாட்டை நீதிபதி முழுமையாக படித்து காண்பித்தார். பின்னர், உங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது வழக்கை நடத்துகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு விஷால், பொய்யான குற்றச்சாட்டு என்பதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புகிறேன் என்றார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 23-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.