விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்

ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக இருந்த சுஜாதா, மீண்டும் அதே பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்
Published on

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு திரைத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறி உறவில் இருந்ததாக சந்தேகித்து, மன உளைச்சல் ஏற்பட்டது என குறிப்பிட்டிருந்தார். அதே போல் இது குறித்து பல முறை சமரச பேச்சு வார்த்தைகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

மேலும் கடந்த நான்கு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்தும் தனித்தனியாகவே வாழ்ந்து வரும் நிலை உள்ளது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மற்றும் சங்கீதா தரப்பிலிருந்தும் வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், நீதிமன்றத்தில் வழக்கில் தொடர்புடையவர்கள் எப்போது நேரில் ஆஜராகுவார்கள் என கேட்ட போது, ஜூன் மாதம் ஆஜராக வாய்ப்புள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் விவாகரத்து வழக்கில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆதரவாகி, தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக இருந்த சுஜாதா, மீண்டும் அதே பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com