

ஐகோர்ட்டு உத்தரவு
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 206 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. கொரோனா பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
துண்டு பிரசுரம்
இந்தநிலையில் ஏப்ரல் 17-ந் தேதி (நேற்று) முதல் கோர்ட்டுகளில் முககவசம் கட்டாயம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அனைத்து கீழமை கோர்ட்டுகளிலும் முககவசம் அணிந்து வருவது நேற்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. திருச்சியில் கோர்ட்டு வளாகத்தின் நுழைவு வாயில்களில் கட்டாயம் முககவசம் அணிந்து உள்ளே வர வேண்டும் என துண்டுபிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி நேற்று திருச்சி கோர்ட்டுக்கு வந்த நீதிபதிகள்-வக்கீல்கள் முககவசம் அணிந்து வந்தனர். மேலும், கோர்ட்டுக்கு வரும் போலீசாரும், பொதுமக்களும் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும், கைதிகளையும் முககவசம் அணிந்தபடி தான் அழைத்து வர வேண்டும் என்றும் நுழைவாயில் முன்பு நின்றபடி கோர்ட்டு ஊழியர்கள் வலியுறுத்தினார்கள்.