'வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்' - திருமாவளவன்

நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
'வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்' - திருமாவளவன்
Published on

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையைச் சார்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தி அவரை அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் நடந்திருப்பது, குறிப்பாக கோர்ட்டிலேயே பலரின் முன்னிலையில் நீ ஒரு கோழையா என்றும் அவர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் போக்கு கண்டனத்துக்குரியதாகும்.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீது 14 பக்கங்களைக் கொண்ட புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார் என்பதை அறிந்தே அவர் ஆத்திரப்பட்டு இவ்வாறு நடந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.

சாதி மதம் பார்த்து, வேண்டியோர் வேண்டாதோர் என பார்த்து தீர்ப்பு வழங்குகிறார் என்பதையும், சராசரி நபர்களைப்போல சாதி-மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஒருசார்பு நிலையெடுத்துப் பேசுகிறார் என்பதையும் அந்தப் புகாரில் வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருக்கிறார் எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், ஒரு வழக்கறிஞருக்கு எதிராக தனது சட்டபூர்வமான அதிகாரத்தை பயன்படுத்த முளைவது எவ்வகையில் ஏற்புடையதாகும்? அவர் தனக்கு எதிரான புகாரைத் தானே எப்படி விசாரிக்கமுடியும்?

இதில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உடனே தலையிட்டு வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே தடுத்திட வேண்டுமென கோருகிறோம். அத்துடன் நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்திட ஆவன செய்ய வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com