வருமானத்தை மறைத்ததற்காக அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு


வருமானத்தை மறைத்ததற்காக அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 24 Jan 2026 6:59 AM IST (Updated: 24 Jan 2026 7:01 AM IST)
t-max-icont-min-icon

வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று விஜய் கணக்கு காட்டியிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015-ம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டுபிடித்தனர்.

இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தை அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இறுதி விசாரணைக்காக நேற்று வந்தது.

அப்போது விஜய் தரப்பில், “சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக, சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என்று வாதிட்டார்.

வருமான வரித்துறை தரப்பில், “வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

1 More update

Next Story