தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை காட்ட ஜூன் 3-ந்தேதி கடைசி நாள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதியன்று வெளியிடப்பட்டன.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை காட்ட ஜூன் 3-ந்தேதி கடைசி நாள்
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.40 லட்சம் வரை செலவிடலாம் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதியன்று வெளியிடப்பட்டன. தேர்தல் முடிவு வெளியாகி 30 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த வகையில் வருகிற ஜூன் 3-ந்தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் வேட்பாளர்களோ அல்லது அவர்களின் முகவர்களோ தேர்தல் செலவு கணக்குகள், அதற்கான பில்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். அவற்றை செலவின பார்வையாளர்கள் சரிபார்த்து தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிப்பார்கள்.

வேட்பாளர்கள் இதுவரை தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. அவற்றை செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஜூன் 3-ந் தேதிதான் கடைசி நாள் என்பதால் அதற்குப் பிறகு செலவுக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது. கணக்கு விவரங்களை காட்டாதவர்களுக்கு தேர்தல் கமிஷன் விளக்க நோட்டீஸ் அளிக்கும்.

அதற்கு வேட்பாளர் தரப்பில் அளிக்கும் பதில் ஏற்கத்தக்கதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து அரசிதழில் தேர்தல் கமிஷன் அறிவிப்பாணையை வெளியிட்டுவிடும். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது.

X

Daily Thanthi
www.dailythanthi.com