

சென்னை,
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
துணை மேயர் மகேஸ் குமார் பேசுகையில், 'சைதாப்பேட்டை தொகுதியில் ஒரு பூங்கா புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார். மண்டலக் குழு தலைவருக்கும் வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லவே இல்லை. அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்' என்றார்.
உடனே கவுன்சிலர்கள் பலரும் எழுந்து எங்கள் வார்டுகளிலும் இதே நிலைமைதான். அரசு நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதே இல்லை. ஆணையர் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது மேயர் பிரியா பேசுகையில், 'கவுன்சிலர்களுக்கு மட்டும் இல்லை. எனக்கே அந்த நிலைமைதான். முதல்-அமைச்சர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், வெளியில் முதல்-அமைச்சரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறது.
முதல்-அமைச்சர் வருகிறார் என்றால் எத்தனை மணிக்கு வருகிறார் என சொல்ல வேண்டாமா?. நான் என்ன காலைல இருந்து இரவு வரை ரிப்பன் பில்டிங்லயேவா இருக்க முடியும்.. முதல்-அமைச்சர் வர போறாரனு முன்னாடியே சொல்ல வேண்டும். மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க சொல்லி அதிகாரிகளுக்கு எதுவும் அறிவிப்பு வந்திருக்கா? எத்தன வாட்டி சொல்றது..
கவுன்சிலர்கள் மக்களின் குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு ஒரு வேலையை செய்தால் அதை எம்.எல்.ஏக்கள் வந்து திறந்து வைப்பதா?. எம்.எல்.ஏக்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். நாங்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க விருப்பமில்லையெனில் மாநகராட்சியை கலைத்து விடுங்கள்.. அதிகாரிகளே கூட்டத்தை நடத்தட்டும் என்று ஆவேசமாக பேசினார்.
அடுத்ததாக பேசிய துணை மேயர், 'பிரதமரின் நிகழ்ச்சிக்கு மேயருக்கு அழைப்பு வந்தது. அங்கே அவர் சென்றார். முதல்வரின் நிகழ்ச்சிக்கும் அழைத்தால் மரபுப்படி மேயர் வருவார்' எனக் கூறினார். மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவ்வாறு வாக்குவாதங்கள் நடந்ததால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.