கல்வித்துறை போல் விளையாட்டு துறையும் அதிக கவனம் செலுத்த வேண்டிய துறை -ஆதவ் அர்ஜுனா

போதை பழக்கத்தை ஒழிக்க கல்வி போல் விளையாட்டு துறையை சரிசமமாக பார்க்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
Published on

சென்னை,

சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவ -மாணவியரிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்துரையாடினார். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் கேட்டறிந்தார்.

அப்போது நிருபர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பான அமைச்சரவை பணியை தொடங்கி உள்ளோம். முதல்-அமைச்சர் வழிகாட்டுதல் பெயரில் விளையாட்டு துறை அமைச்சர் என்பதை விட இதே இடத்தில் ஒரு ஹாஸ்டல் மாணவராக இருந்த விளையாட்டு வீரர் நான்.

கல்வித்துறை போல் விளையாட்டு துறையும் அதிக கவனம் செலுத்த வேண்டிய துறை. தமிழ்நாட்டில் மது பழக்கம், போதை கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் இளைஞர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியம்.

உதாரணத்திற்கு, பிரேசிலில் போதை பழக்கம் அதிகமாக இருந்த போது அந்த நாட்டில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் விளையாட்டுத்துறையில் முதலிடம் பெற்றது.

எனவே பள்ளிகளில் இருந்தே மாணவ- மாணவியர்களுக்கு தேவையான சர்வதேச அளவிலான விளையாட்டு கவனம் செலுத்தப்பட வேண்டும். நம் பள்ளிக்கல்வியில் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் எப்படி வெல்வது என்று சொல்லி கொடுப்பது இல்லை.

நம் விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் குறித்து சரியான புரிதல் இல்லை. எப்படி பங்கு பெற வேண்டும் என்று தெரியவில்லை. பள்ளி விளையாட்டுக்கள் தேசிய விளையாட்டுக்கள் வரையில்தான் நம் கவனம் உள்ளது. 10 வயதிலேயே ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அளவிற்கு பயிற்சி அளிக்க வேண்டும். செயல் திட்டம் உருவாக்க வேண்டும்.

போதை பழக்கத்தை ஒழிக்க கல்வியில் விளையாட்டு துறையை சரிசமமாக பார்க்க வேண்டும். பள்ளிக்கல்வியில் இருந்து கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

X

Daily Thanthi
www.dailythanthi.com