அந்தமானுக்கு ஒரு நீதி? கர்நாடகாவுக்கு ஒரு நீதியா? - ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி

மேகதாதுவில் அணைகட்ட நினைக்கும் கர்நாடக அரசின் முயற்சி தவறு என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மாநில சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் தலைவரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் எப்படியாவது அணையை கட்டிவிட வேண்டும் என்று கர்நாடக அரசு துடித்து வருகிறது. காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழித்துதான் மேகதாது அணையை கட்ட கர்நாடகா திட்டமிடுகிறது.

வனப்பகுதியை அழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன். சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு அந்தமானில் கொண்டுவரப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அந்த வழியாகத்தான் கப்பல் போக்குவரத்து நடைபெறும்.

இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு நன்மையும் ஏற்படும். வருமானமும் அதிக அளவில் கிடைக்கும். ஆனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் ராகுல் காந்தி அந்த திட்டத்தை எதிர்க்கிறார். அங்குள்ள காடுகள் அழிக்கப்படும் என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அந்தமானுக்கு ஒரு நீதி? கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?

மேகதாது அணைக்காக 12,500 ஏக்கர் காடுகளை கர்நாடகா அழித்தால் காட்டில் உள்ள புலிகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் என்ன செய்யும்? பறவைகள் என்ன செய்யும்? எனவே சட்டரீதியாகவும், சூழலியல் ரீதியாகவும் மேகதாதுவில் அணைகட்ட நினைக்கும் கர்நாடக அரசின் முயற்சி தவறு. கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் செய்வதற்காக முதல்-மந்திரி சிவகுமார் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com