

சென்னை,
தமிழகத்தில் நடைபெற்ற 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடும் சட்டசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்க இருக்கின்றனர்.
ஆனால், புதிய சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாததால், தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் உறுப்பினர் கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
சட்டசபையில் நாளை காலை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றுக்கொள்கின்றனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.