காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

காலை உணவு திட்டத்தால் பள்ளிக் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று போற்றுகிறது பழந்தமிழ் இலக்கியம். அதன்படி, திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் பிரிவான நீதிக்கட்சியின் நிர்வாகத்தில், பள்ளியில் மதிய உணவு வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 16.9.1920-இல் இருந்து சரியாக 102 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில், 15.9.2022 அன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, மாணவக் குழந்தைகளுடன் அமர்ந்து, சாப்பிட்டு மகிழ்ந்தேன். பிள்ளைகளின் வயிறு நிறைந்தது. எனக்கு மனது நிறைந்தது.

முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் 1,14,095 குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளும் பயன்களும் எப்படி இருக்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். குழந்தைகளுக்கு என்ன வகையான ஊட்டச்சத்துகள் தேவை, அவர்கள் என்ன விதமான உணவை விரும்புகிறார்கள்.

சத்தும் ருசியும் கலந்த உணவு வழங்கப்படுகிறதா என்கிற ஆய்வுகளை மேற்கொண்டு, காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடியிருப்பதையும், தாய்மார்கள் தங்கள் பணிச்சுமை குறைந்த மகிழ்ச்சியுடன் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு அனுப்புவதையும் அறிந்துகொண்டேன். அடுத்த கட்டமாக, 2023-ம் ஆண்டு மார்ச் 1-ம் நாளன்று மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 433 அரசு தொடக்கப் பள்ளிகளில் 56 ஆயிரத்து 160 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் அவர் படித்த தொடக்கப்பள்ளியில் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி உங்களில் ஒருவனான நான், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் தொடங்கி வைத்ததன் விளைவாக, 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறத் தொடங்கினர்.

இந்தத் திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவடையச் செய்தால், அங்கு பயிலும் எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தினை கவனத்துடன் பரிசீலித்தது மக்களின் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுத் தொடங்கி வைத்தேன்.

இதன் மூலமாக ஊரகப் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். தற்போது மொத்தமாக, 34 ஆயிரத்து 987 தொடக்கப் பள்ளிகளில், 17 லட்சத்து 53 ஆயிரம் மாணாக்கர்கள் சத்தான காலை உணவுடன், தெம்பாகக் கல்வி கற்று வருகிறார்கள்.

உணவை அளித்து உயிரை வளர்க்கும் தமிழர் மரபில், குழந்தைகளுக்குக் காலை உணவு தந்து கல்வியை வளர்க்கும் முதன்மையான பணியை மேற்கொண்டிருக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நம்முடைய அரசு அடுத்தகட்டமாக காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யவிருக்கிறது. வருகிற 26-ம் தேதி சென்னை மயிலாப்பூர் மண்டலம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தினை என் அன்பிற்குரியவரும் பஞ்சாப் மாநில முதல்-மந்திரியுமான பகவந்த் மான் முன்னிலையில் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் நகர்ப்புறம் சார்ந்த 2 ஆயிரத்து 429 பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 6 ஆயிரம் மாணவ-மாணவியர் பயன் பெறுவர். நாள்தோறும் திட்டங்கள், நலிவுற்றோர் ஏற்றம் காணும் செயல்பாடுகள், தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com