காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார்... கடலில் குளிக்க தடை

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.
காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார்... கடலில் குளிக்க தடை
Published on

சென்னை,

சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி (சனிக்கிழமை) பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின் பேரில் 16 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக போலீஸ் கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும்.

அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப்பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய ரோந்து வாகனம் மூலம் போலீசாரால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர்.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்டநெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர போலீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட, கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள், போலீஸ் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் இதர சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு மோட்டார்சைக்கிள் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com