ககன்யான் சோதனை ராக்கெட் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ திட்டம் - இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள்

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் சோதனை ராக்கெட் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Representative Image (Credit: ISRO)
Representative Image (Credit: ISRO)
Published on

சென்னை,

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்திற்கான 2 சோதனை ராக்கெட்டுகள் வருகிற ஆகஸ்டு மற்றும் டிசம்பரில் விண்ணில் ஏவ திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இதில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப்படையிலிருந்து 3 பேரை விண்வெளிக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.

வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு, ககன்யான் திட்டத்திற்காக இரண்டு ஆளில்லாத ராக்கெட்டுகளில் மனித ரோபாக்கள் அனுப்பபட உள்ளனர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னர் மூன்று வீரர்கள் செல்லும் விண்கலம் பூமியில் இருந்து 300 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூமியின் குறைந்த தூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வீரர்கள் செல்லும் விண்கலம் 3.7 மீட்டர் விட்டமும், 7 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். இதன் எடை 7 டன்களாக இருக்கும். விண்வெளியில் வீரர்கள் 5 முதல் 7 நாள்கள் வரை தங்கி இருப்பார்கள். பின்னர் இறங்கும்போது ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் வங்க கடலில் இறங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

கடலில் இறங்கிய 20 நிமிடங்களில் வீரர்கள் மீட்கப்படுவார்கள். இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்படும் இந்த விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். ககன்யான் திட்டத்தால் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மேம்படும். இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்திற்கான 2 சோதனை ராக்கெட்டுகள் வருகிற ஆகஸ்டு மற்றும் டிசம்பரில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைகோளான இ.ஓ.எஸ்-6 அல்லது ஓசோன்சாட்-3 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் வருகிற ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட முதல் வளர்ச்சி ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் வருகிற மே மாதமும், 2-வது ராக்கெட் ஆகஸ்டு மாதம், 3-வது ராக்கெட் டிசம்பர் மாதமும் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மூன்றுமே வளர்ச்சிக்கான ராக்கெட்டுகளாகும். அதேபோல், சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் வருகிற செப்டம்பர்-அக்டோபர் மாதம் இறுதி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளது. ஏவப்படும் தேதி குறித்து தலைமையகம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

சந்திரயான்-3 பல்வேறு அமைப்புகளின் சீரான சோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதால், அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலகட்ட சோதனைகள் அதிகம் இருப்பதால், இவற்றில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவது சாத்தியமில்லை.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com