

மதுக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் அருகே உள்ள முசிறி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24 ஆண்டுகள் ஆனதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன.
திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த 18 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமமும் உள்ளிட்ட பூஜைகள் மற்றும் ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம்வந்தனர்.
பின்னர் அந்த புனித நீரை விமான கலசங்கள் மற்றும் ராஜகோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.