கஜா புயல்; ஒரத்தநாடு பகுதியில் 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு

கஜா புயல் பாதித்த தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் புதூர் கிராமம் என்ற இடத்தில் மத்திய குழு இன்று 2வது நாளாக ஆய்வு செய்து வருகிறது.
கஜா புயல்; ஒரத்தநாடு பகுதியில் 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு
Published on

தஞ்சை,

தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதை தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நேற்று முன்தினமே சென்னை வந்தனர்.

அவர்கள் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியில் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர்.

இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்ட முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.

இந்த நிலையில், கஜா புயல் பாதித்த தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் புதூர் கிராமம் என்ற இடத்தில் மத்திய குழு இன்று 2வது நாளாக ஆய்வு செய்து வருகிறது. மத்திய குழுவினர் புதூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்றும் ஆய்வினை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com