கள் விவகாரம்: விவசாயி மீதான போலீஸ் துப்பாக்கி சூடு குறித்து சப்-கலெக்டர் ஆஜராகி விளக்கம்

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
கள் விவகாரம்: விவசாயி மீதான போலீஸ் துப்பாக்கி சூடு குறித்து சப்-கலெக்டர் ஆஜராகி விளக்கம்
Published on

மதுரை,

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரை சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என் மகன் மணிகண்டன் விவசாயி ஆவார். கடந்த 7-ந்தேதி எங்கள் தோட்டத்தில் இருந்தேன். அப்போது எனது மகன் மணிகண்டனுடன் சீருடை அணியாத ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா உள்ளிட்ட சில போலீசார் வந்தனர். அவர்கள் எங்கள் தோட்டத்தில் இருந்த பனையில் கள் இறக்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அதை பார்த்து நானும், என்னுடன் இருந்த பேரன், பேத்திகளும் அங்கு சென்றோம்.

அப்போது என்னையும், பேரக்குழந்தைகளையும் சப்-இன்ஸ் பெக்டர் இசக்கி ராஜா ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதனை என் மகன் மணிகண்டன் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இசக்கிராஜா துப்பாக்கியை எடுத்து மணிகண்டனின் காலில் சுட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முறையாக விசாரிக்கவில்லை. சப்-இன்ஸ்பெக் டர் இசக்கி ராஜா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை துப்பாக்கி சூடு வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் கூடாது என உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, தென்காசி அருகே விற்கப்பட்ட கள் எங்கிருந்து கிடைத்தது என போலீ சார் விசாரித்துள்ளனர். அது தொடர்பாக மனுதாரர் மகனையும் போலீசார் விசாரித்து இருக்கிறார்கள். மனுதாரர் மகன் போலீசாரை தாக்கியுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார், மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டனர். இது தொடர் பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். அதன் அறிக்கை கிடைத்த பின்புதான் முழுமையான விவரம் தெரிய வரும் என்றார்.

இதையடுத்து சப்-கலெக்டரை வீடியோ கான்பரன்சிங் (காணொலி) முறையில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சிறிது நேரத்தில் சப்-கலெக்டர் நீதிபதி முன்பாக ஆஜரானார்., விவசாயியை துப்பாக்கியால் போலீசார் சுட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சப்-கலெக்டரின் விசாரணை முடிந்து அதன் அறிக்கையை பெற்ற பின்பு மேல் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து, இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com