அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

நல்லம்பள்ளி,

அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் காலபைரவருக்கு கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், அஷ்டபைரவர் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மூலமந்திர யாகம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து காலபைரவருக்கு சந்தனம், தயிர், மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. உபகார பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிறப்பு யாகம்

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு ஆகியவற்றை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதில் பல்வேறு நட்சத்திரங்கள் மற்றும் ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜைகளும் நடத்தப்பட்டன. சிறப்பு வழிபாட்டையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com