இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

தேனி மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் வருகிற 28-ந்தேதி தேனியில் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்
Published on

கலைப்போட்டிகள்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையின் சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, தேனி மாவட்ட அளவில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவி இசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் கலைப்போட்டிகள் தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் காலை 10 மணியளவிலும், கிராமிய நடனம் மற்றும் ஓவியப் போட்டிகள் மதியம் 2 மணியளவிலும் நடக்கிறது. குழுவாக போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

கிராமிய நடனங்கள்

குரலிசை, நாதஸ்சுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்போட்டிகளில் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்மஇசை) நிகழ்த்தும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பரத நாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளைஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலைமக்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.

பரிசுத்தொகை

ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியதாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டியில் வெற்றிபெறும் இளைஞர்களுக்கு முதல்பரிசாக ரூ.6 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.4,500, 3-வது பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

மேலும் இதுதொடர்பான விவரங்களை கலைபண்பாட்டுத் துறையின் இணையதளம் வாயிலாக பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க தேனி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com