கலைஞரின் 103-வது பிறந்த நாள்: கவிஞர் வைரமுத்து வாழ்த்து செய்தி

‘வள்ளுவர் சிலையை முத்தமிடும் கன்னியாகுமரிக் கடலலை கலைஞரே என்று உச்சரிக்கிறது’ என்று வைரமுத்து கூறினார்.
 கவிஞர் வைரமுத்து
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்து

ஒரு சமூகத்தின்

மாறாத தேசிய குணம்

மறதி

சூரியனை மறந்துவிடும்

வானத்தைப் போல

சொற்களை மறந்துவிடும்

மொழியைப் போல

உன்னையும் மறக்கிறதய்யா

சின்னதொரு கூட்டம்

ஆனால்,

மறதியை மறக்கச் செய்யும்

மந்திரம் போட்டவன் நீ

வள்ளுவர் சிலையை முத்தமிடும்

கன்னியாகுமரிக் கடலலை

கலைஞரே என்று உச்சரிக்கிறது

வள்ளுவர் கோட்டத்துத்

தேர்க் கோபுரத்தில்

தெறிக்கும் மழைத்துளி

உன்னைத் தேடியே

மண்ணில் வீழ்கிறது

ஒடுக்கப்பட்ட மக்களின்

உலை அரசி கொதித்து

உனக்கு நன்றி என்று

உடைந்து சொல்கிறது

சம்பவம் மீது

சம்பவம் விழுந்து

சரித்திரம் புதையலாம்

ஆனால்,

தமிழ் மீது

தமிழ் விழுந்து

சரித்திரம் அழிவதில்லை

தொல்காப்பியனும்

வள்ளுவனும் இளங்கோவும்

மறக்கப்படாதவரை

நீயும் நினைக்கப்படுவாய்

கேள்விகளுக்கு

விடையாய் இருந்தவனே

தோல்விகளுக்கு

மருந்தாகவும் இரு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com