கலைஞர் மாரத்தான் போட்டி பதிவு கட்டணம் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒப்படைப்பு

கலைஞர் மாரத்தான் போட்டிக்கு பெறப்பட்ட பதிவு கட்டணம் ரூ.56 லட்சத்தை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
கலைஞர் மாரத்தான் போட்டி பதிவு கட்டணம் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒப்படைப்பு
Published on

உலக சாதனை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி தி.மு.க. சார்பில் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 36 நாடுகள், இந்தியாவில் 4 மாநிலங்கள், தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இருந்துமொத்தம் 19 ஆயிரத்து 596 பேர் பங்கேற்றனர். இதன் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இணைய வழியாக நடத்தப்பட்ட மெய்நிகர் மாரத்தான் போட்டியில், கலைஞர் மெய்நிகர் மாரத்தான் போட்டி உலக சாதனை மற்றும் ஆசிய சாதனை படைத்தது. மேலும் இப்போட்டி பதிவு கட்டணமாக 56 லட்சத்து 2 ஆயிரத்து 693 ரூபாய் கிடைத்திருந்தது.

கொரோனா நிவாரண நிதி

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் பதிவு கட்டணத்தை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.56 லட்சத்து 2 ஆயிரத்து 693 பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். அதன்படி 21 கி.மீ. தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிய புனேயை சேர்ந்த பாபுபரந்தாமன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த டாக்டர் வேலாயுதம் என்பவருக்கு 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், சென்னையை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், கோவையை சேர்ந்த மாரிமுத்து உதயகுமார் என்பவருக்கு 4-ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

4-ம் வகுப்பு மாணவன்

10 கி.மீ. தூர மாரத்தானில் முதல் பரிசு பெற்ற ஓசூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ரோகித்துக்கு ரூ.15 ஆயிரமும், 2-ம் பரிசு பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அக்ஷயா ஸ்ரீக்கு ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசு பெற்ற திருவாரூரை சேர்ந்த அருண் சுரேஷ் என்பவருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. 5 கி.மீ. தூர மாரத்தானில் சென்னை கே.கே. நகரை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவர் ரூபேஷ் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், கண்ணன் என்பவர் 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500-ம், துறையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கிரிராவ் 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com