தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீது நவம்பர் 30-ந் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள தகுதிவாய்ந்தவர்களுக்கும் அதை வழங்கக்கோரி உறுப்பினர்கள் நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.) ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.

அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தி.மு.க. தேர்தல் அறிக்கை

ஆர்.பி.உதயகுமார்:- தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில், கையில் குழந்தைகளுடன் பெண்கள் செல்போனை வைத்துக்கொண்டு, எங்களுக்கு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான குறுந்தகவல் வரவில்லை என்று கூறிவருகின்றனர். 2 கோடியே 50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 59 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமை தொகை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தகுதிவாய்ந்த பலர் விடுபட்டு உள்ளனர். வசதிபடைத்தவர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.

கட்சி பாகுபாடு இல்லை

சபாநாயகர் மு.அப்பாவு:- அப்படியான குற்றச்சாட்டை யாரும் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- கலைஞர் மகளிர் உரிமை தொகை 1 கோடி மகளிருக்கு கொடுப்போம் என்று கூறினோம். ஆனால், 1 கோடியே 6 லட்சத்துக்கு மேல் வழங்கியுள்ளோம். 9 லட்சத்துக்கும் அதிகமாக மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவை பரிசீலனை செய்யப்படும். தகுதிவாய்ந்தவர்களை கண்டறிந்து, ரூ.1,000 கண்டிப்பாக வழங்கப்படும். உறுப்பினரிடம் கோரிக்கை வந்தால் அதை தாருங்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் வழங்கப்படும்.

ஆர்.பி.உதயகுமார்:- முதலில், அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நடவடிக்கை

சபாநாயகர் அப்பாவு:- உதயகுமார் மனைவிக்கும், அப்பாவு மனைவிக்கும் இந்த மகளிர் உரிமை தொகை வேண்டுமா?.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அரசின் நிதி நிலைமை நன்றாக இருந்திருந்தால், முதலிலேயே கொடுத்திருப்போம்.

ஆர்.பி.உதயகுமார்:- மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த 60 லட்சம் பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே, விதிமுறைகளை தளர்த்தி உதவித்தொகை வழங்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- தகுதிவாய்ந்த யாராவது விடுபட்டிருந்தால், என்னிடம் கூட வேண்டாம், மாவட்ட கலெக்டரிடம் விவரத்தை தெரிவியுங்கள். உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நிறைவாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பதில் அளித்து பேசியதாவது:-

வரலாற்றில் முதல்முறை

சொன்னதை செய்வோம் - செய்வதை மட்டுமே சொல்வோம் என்று தலைவர் கருணாநிதி சொன்னார். அந்த வழியில்தான் நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் 115-வது பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிரின் வங்கிகணக்கில், ஒரே நேரத்தில் தலா ரூ.1,000 வீதம் ரூ.1,065 கோடி வரவு வைக்கப்பட்டது, தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக ஒரு கோடியே 62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

திட்ட விதிகளில் மாற்றம்

மிகவும் வெளிப்படைத்தன்மையுடன், எந்த ஒரு அழுத்தமோ, குறுக்கீடோ இல்லாமல், முழுக்க முழுக்க தகுதி வாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிர் இந்த திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர், திருநங்கையர், முதியோர் உதவித்தொகை பெறுவோரை கொண்ட குடும்பத்தினரும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தின் விதிகள் மாற்றப்பட்டன.

முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி, நிபந்தனைகள் தளத்தப்பட்டதன் காரணமாக 2 லட்சத்து 6 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களும், 4 லட்சத்து 72 ஆயிரம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற்றுள்ளன.

சிறப்பு பயிற்சி முகாம்

இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழும் திருநங்கைகள் பயனடையலாம் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். திருநங்கைகளின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டால் அவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் ஆய்வு செய்து நவம்பர் 30-ந் தேதிக்குள் உரிய தீர்வினை அளிப்பார்கள். இந்த மேல்முறையீட்டு பணிகளை மேற்கொள்ள வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு வரும் 12-ந் தேதி (நாளை) சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

ஒருங்கிணைந்து செயல்படுவோம்

அதுமட்டுமல்ல, ஏற்கனவே விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் வெற்றி என்பது, தமிழ்நாட்டு மகளிரின் வெற்றியாகும். இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காமல் விட்டவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளோம். விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், விண்ணப்ப தகுதியை பெறுகிற அனைத்து மகளிரும் பயனடையும் வண்ணம் இந்த அரசு செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com