கள்ளழகர் திருவிழா - கட்டுப்பாடுகள் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்கள் பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை,

மதுரையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவை ஒட்டி முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி ஆட்டு தோலால் செய்யப்பட்ட பைகளில் தண்ணீர் நிரப்பி அதனை கள்ளழகர் மீது பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக விரதம் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வின்போது, சிலர் தோல் பையில் அதிக உயர் அழுத்த மோட்டார்களை பொருத்தி, தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கலந்து, கள்ளழகர் மீது பீய்ச்சி அடித்து வருகின்றனர். இதன் காரணமாக, கள்ளழகர் சிலை, தங்கக் குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் ஆகியவை பாதிப்படையும் நிலை ஏற்படுகிறது.

மேலும், சிலர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் அவ்வப்போது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே, உயர் அழுத்த மோட்டார் மூலம் சுவாமி சிலை மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்கள் பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது. பாரம்பரிய முறையில் தோல்பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீரை பீய்ச்சி அடிப்பவர்கள் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்க கூடாது. கள்ளழகர் அழகர் மலையிலிருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com