கள்ளக்குறிச்சி: மணல் கடத்தல் புகார் அளித்ததாக 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்- 2 பெண்கள் காயம்

வீடுபுகுந்து தகராறு செய்ததை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவியின் ஆடையை கிழித்து சரமாரியாக தாக்கினர்.
காயமைந்த சித்தி
Published on

கள்ளக்குறிச்சி,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வைப்பாளையத்தில் 2 பெண்களை 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணல் கடத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வைப்பாளையத்தில் வசித்து வரும் ரமேஷ். சமூக ஆர்வலரான இவர், மணல் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக விழுப்புரத்திற்கு சென்றிருந்தார். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 15 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு சென்று, ரமேஷின் மாற்றுத்திறனாளி சகோதரரை திட்டி உள்ளனர். மணல் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு ஏன் தகவல் தெரிவிக்கிறீர்கள்? என வாய்க்கு வந்தபடி பேசி உள்ளனர்.

இரண்டு பெண்கள் காயம்

சத்தம் கேட்டு வந்த ரமேஷின் மகள் அக்‌ஷயா (கல்லூரி மாணவி) இதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அக்சயாவின் உடையை கிழித்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளது. தடுக்க வந்த சித்தி பாக்கிய லட்சுமியையும் (வயது 38) இந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.

தாக்குதலில் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் தாக்கிய 15 பேரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததாக கூறி 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com