

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் 35 கிலோ கஞ்சா கடத்திய திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 35 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், மினிலாரியில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்களான விஜயகுமார் மகன் ரிஷி (வயது 24), மலைச்சாமி மகன் ஆகாஷ்(19) ஆகியோர் என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து 35 கிலோ கஞ்சாவை வாங்கி, விற்பனைக்காக மதுரைக்கு மினி லாரியில் கடத்தி சென்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து ரிஷி, ஆகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் 35 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ரிஷி டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.