

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து புகுந்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கோபாலின் மகன் ராமச்சந்திரன், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கிரில் கதவு உடைக்கப்பட்டு கடை திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, அடகு வைக்கப்பட்டிருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடையில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அடகு கடையில் கைவரிசை காட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகரின் மையப்பகுதியில் உள்ள அடகு கடையில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.