

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 57). இவர் தியாகதுருகத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது அவருடைய கடையின் முன்பக்க இரும்பு கதவு பூட்டு வெட்டப்பட்ட நிலையில் உடைந்து கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ பூட்டு வெட்டி எடுக்கப்பட்ட நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சவரன் நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் நள்ளிரவில் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதை கண்டு பதறிய ராமச்சந்திரன் இதுபற்றி தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்தனர். அப்போது ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் முகமூடி அணிந்தபடி வந்து கடையில் 4 இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை வேறு பகுதிக்கு திருப்பி வைத்ததுடன், முன் பக்க கதவு மற்றும் பீரோ பூட்டை கட்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுத்து, அதில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.