கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் அதிரடி கைது

இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு அவ்வப்போது செல்போனில் பேசி வந்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த பெண்ணுக்கும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் உளுந்தூர்பேட்டை அருகே பாளையம் குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த ஷேக் தாவூத் மகன் ஷேக் சலீம் (வயது 36) என்பவருக்கும் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு அவ்வப்போது செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் ஷேக் சலீம், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண் சத்தம் போடவே ஷேக் சலீம் அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் இதுகுறித்து அந்த பெண் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக் சலீமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட முதல் நிலை காவலர் ஷேக் சலீமை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.






