கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: போலீஸ் துறை, வருவாய்த்துறை தோல்வி அடைந்துவிட்டது -கே.எஸ்.அழகிரி பேட்டி

அனுபவ ரீதியாக நாங்கள் கூறிய கருத்தை ஏற்கவில்லை. இதனால் கள்ளக்குறிச்சி கலவர சம்பவத்தில் போலீஸ் துறை மற்றும் வருவாய்த்துறை தோல்வி அடைந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: போலீஸ் துறை, வருவாய்த்துறை தோல்வி அடைந்துவிட்டது -கே.எஸ்.அழகிரி பேட்டி
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

எங்கள் கட்சியினர் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு வார காலம் மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை வரும் என அனுபவரீதியாக ஆலோசனை கூறினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் அந்த கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழக போலீஸ் துறை ஒரு புகழ்பெற்றது. ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீஸ் துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்?, எதற்கு இந்த செய்திகளை வதந்தியாக பரப்பியிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்க வேண்டும். வன்முறையாளர்கள் பள்ளி உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகிற போது போலீஸ் துறை பயந்து ஓடுகிறது.

தோல்வி

போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றபோது இது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது. ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இந்த விஷயத்தில் அரசை பொறுத்த வரை எந்தவித உள்நோக்கமும் இல்லை. அரசினுடைய நோக்கம் உண்மையை கண்டறிவதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அது கொலையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். தற்கொலையாக இருந்தால் குழந்தைகளின் மனநிலையை ஆராய வேண்டும். மாநிலம் முழுவதிலும் உள்ள கல்விக்கூடங்களில் மனநல ஆலோசகர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com